ஐந்து பகுதிகளைக் கொண்ட 🚢 கடல் பயணம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், இரண்டாவது பகுதியை இங்கு பார்ப்போம்.
நோக்கம்:
வாழ்க்கையில் தவறான தேர்வுகள் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுகொள்வார்கள்.
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- வேதாகம நிகழ்வு (20 mins)
- செயல்பாடு (10 mins)
- விளையாட்டு (10 mins)
பாடத்தின் அறிமுகம்
தவறு செய்வது அநேக நேரங்களில் ஜோலியாக இருக்கும். அப்படித்தானே? எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வகுப்பை கட் அடித்தல், அல்லது உங்கள் பெற்றோரிடம் பொய் சொன்னால், கூடுதல் வீடியோவைப் பார்த்தால் அல்லது மொபைல் கேம்களை இன்னும் சிறிது நேரம் விளையாடினால், அது ஒருவித குறுகிய கால மகிழ்ச்சியை அளிக்கிறது. நண்பர்கள் கூட பாராட்டுவார்கள் “ஓ, அவர்(ள்) மிக புத்திசாலி”. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை யோனாவின் கதையிலிருந்து நாம் கண்டுபிடிப்போம். அப்படி என்ன விளைவுகள் என்று கேட்க நீங்கள் தயாரா?
பாடல் நேரம்
இந்த “Action Kids” பாடலை நீங்கள் கற்பிக்கலாம்.
பேசலாம் வாங்க
J4K கடல் பயணம் என்பது 5 தீவுகள் வழியாக சிறுவர்களை அழைத்துச் செல்லும் ஒரு சாகசக் கப்பல். கப்பலின் கேப்டன் ஒரு கடற்கொள்ளையர் (பைரேட்). அவர் மிக மோசமான மனிதராய் வாழ்ந்துவந்தார். ஆனால் ஒரு கடல் பயணம் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது. அந்த பயணத்தில் அவர் சந்தித்த ஒரு சிறந்த நண்பரே அவர் வாழ்கை மாற்றங்களுக்கு கரம் என்கிறார். நம்மையும் அதே பயணத்தில் அழைத்து செல்ல விரும்புகிறார்.
இந்த பைரேட்டை சந்திக்க, நாம் வீடியோ கால் (Video call) செய்யப்போகிறோம் (சிறுவர்களுக்கு வீடியோவைக் காட்டும்போது போனில் வீடியோ கால் செய்வது போன்று நடித்து காட்டுங்கள். வீடியோவை சில இடங்களில் பாஸ் (pause) செய்து நீங்கள் சில வார்த்தைகளை கூற வேண்டியது இருக்கும். கீழ் உள்ள ஸ்கிரிப்ட்டை (Script) பயன்படுத்தவும். இந்த பகுதியிலே இன்றைய வேத வசனத்தையும் கற்று கொடுப்பீர்கள்).
Penalty தீவுக்கான (தீவு #2) ஸ்கிரிப்ட் இங்கே:
நீங்கள்: தம்பி தங்கச்சி உங்க எல்லாருக்கும் பைரேட் பிடுச்சிற்குல? வீடியோ கால் பண்ணலாமா? (உங்கள் ஃபோனைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பைச் செய்வது போல் செய்யுங்கள்)
பைரேட் வீடியோ: (பைரேட் ஹாய் சொல்வார். பாஸ்வர்ட் (Password) கேட்பார்)
நீங்கள்: (பாஸ்வர்ட் என்பது அன்றைய வேத வசனம். வசனத்தை மூன்று முறை சொல்ல சொல்லுங்கள். வசனம் வாசிக்க அதிக நேரம் எடுத்தால் வீடியோவை இடைநிறுத்தி, தொடரவும்.)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். [ரோமர் 6:23]
பைரேட் வீடியோ: (பைரேட் கடற்கொள்ளையர் உங்களை தீவு முழுவதும் அழைத்துச் சென்று அதைப் பற்றி பேசுவார்)
நீங்கள்: (பைரேட்டிற்கு டாடா சொல்லுங்கள்)
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: யோனா 1: 4-15
கதை சுருக்கம்:
சூரியன் மென்மையாக பிரகாசித்தது. கப்பல் கேப்டன் மகிழ்ச்சியாக இருந்தார். “இன்று வானிலை நன்றாக இருக்கிறது! நாம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்!”, என்று அவர் பயணிகளை நோக்கி கூறினார். பயணிகள் ஒவ்வொருவராக ஏறினர். நுழைவுச் சீட்டு சேகரிப்பாளர் கேட் அருகே நின்றார். அவர் வேலை என்ன என்று தெரியுமா? பயணிகளின் டிக்கெட்டை காட்டச் சொல்வார். பிறகு, “எங்கே போகிறாய்?” என்று கேட்பார். அவர்கள் செல்லுமிடத்தைச் சொல்வார்கள். அவர்களுக்கு சரியான டிக்கெட் கிடைத்ததா என்று பார்க்க அவர் மீண்டும் டிக்கெட்டை சரிபார்த்து அவர்களை உள்ளே அனுமதிப்பார். ஒரு பயணியை அவர் சற்று சந்தேகத்துடன் அன்று பார்த்தார். அவர் பயணியிடம், “எங்கே செல்கிறீர்கள் சார்?” என்று கேட்டார். அந்த மனிதன் அவசரமாக “தர்ஷிஷ்”என்று பதிலளித்தான்.“ஓ! அதுதான் எங்கள் கடைசி நிறுத்தம். உள்ளே வாங்க!“ ஏன் இந்த மனிதன் சற்று கவலையாக இருக்கிறான் என்று டிக்கெட் சேகரிப்பவர் குழம்பினார். அந்த மனிதன் கப்பலுக்குள் விரைவாக சென்றார்.
அந்த மனிதனின் பெயர் உங்களுக்குத் தெரியும். அவர் யார் என்று நினைக்கிறீர்கள்? (குழந்தைகள் பதிலளிக்கட்டும்) ஆம்! யோனா! அவர் ஏன் தர்ஷீசுக்குப் போகத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் நாம் அறிவோம். யாராவது இப்போது சொல்ல முடியுமா? ஆம்! கடவுளுக்குக் கீழ்ப்படிய அவருக்கு மனமில்லை. கப்பலில் ஏறியவுடன் அவர் என்ன செய்தார் என்றும் நமக்கு தெரியும். அவர் என்ன செய்தார்? ஆம்! அவர் கப்பலின் உள்ளே வெகுதூரம் சென்று குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
கேப்டன் கப்பலின் சைரனை அடித்தார். துறைமுகத்தை விட்டு வெளியேறிய கப்பல் மகிழ்ச்சியுடன் கடலுக்குள் சென்றது. ஒரு மெல்லிய காற்று வீசி அனைவரையும் மகிழ்வித்தது. “ஏலேலோ ஏலேலோ ஐலசா” என்று பாடிக்கொண்டே கப்பல் கேப்டன் சந்தோஷமாக கப்பலை ஓட்டினார். திடீரென்று மெல்லிய காற்று மென்மையாக இல்லை. அது மிகவும் கடுமையாயிற்று. கப்பலின் சக்கரத்தை நிலையாகப் பிடிக்க கேப்டனுக்கு உதவி தேவைப்பட்டது. கப்பல் வலப்புறமும், இடப்புறமும் குதித்தது. எல்லோரும் மிகவும் பயந்தார்கள். மாலுமிகள் மிகவும் பயந்து, ஒவ்வொருவரும் தங்கள் தெய்வங்களை வேண்டிக்கொண்டனர். கப்பலை இலகுவாக்க கப்பலில் இருந்து சரக்குகளை கடலில் வீசத் தொடங்கினர்.
இந்த ஆவேசத்தில் ஒரு மனிதன் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்தான். அது யார்? ஆம், யோனா! கேப்டன் ஒவ்வொரு தளத்திற்கும் ஓடி, பலத்த புயல் இருப்பதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அறிவித்தார். அவர் கீழ் தளத்திற்குச் சென்றபோது, யோனாவைக் கண்டார். அவனை எழுப்பி, “ஏன் தூங்குகிறாய்? எழுந்து உன் கடவுளை வேண்டிக்கொள்! ஒருவேளை உன் கடவுளாவது நம்மை காப்பாற்றுவாரா என்று பார்ப்போம். அல்லது நாம் மரித்தே போவோம்!” அந்தச் செய்தியைக் கேட்டு யோனா அதிர்ச்சியடைந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்க மேலே ஓடி வந்தார். தூரமான இடத்துக்குப் போனால் கடவுளை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தார். தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார், இஸ்ரவேலில் மட்டுமல்ல என்பதை அவர் மறந்துவிட்டார்.
கப்பலில் இருந்த அனைத்து மனிதர்களும், “இது நிச்சயமாக யாரோ ஒருவரின் தவறாக இருக்க வேண்டும். தெய்வங்கள் நம்மைத் தண்டிக்கிறார்கள். எனவே, சீட்டு போட்டு குற்றவாளியை கண்டுபிடிப்போம்!” என்றார்கள். சீட்டு யாருடைய பெயருக்கு விழுந்தது என்று நினைக்கிறீர்கள்? ஆம், யோனா! அவர்கள் அனைவரும் யோனாவை நோக்கி – “உன் வேலை என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? உன் மக்கள் யார்?” என்று ஒன்றின்பின் ஒன்றாக கேள்வி கேட்டனர். அப்பொழுது யோனாவுக்கு உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
அவர் என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? (பிள்ளைகள் பதிலளிக்கட்டும்) அவர் அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன். கடலையும், நிலத்தையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவன் என் தேவன். நான் அவருக்கு கீழ்ப்படியாமல், அவர் என்னைச் போகச் சொன்ன இடத்திலிருந்து எதிர் பக்கம் ஓடி வந்துள்ளேன்” என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் மிகவும் பயந்தார்கள். என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. புயல் நிற்கவில்லை. காற்றோ இன்னும் கொடூரமாக விசீயது. “நான் உண்மையைச் சொன்னதும் கடவுள் காற்றை நிறுத்துவார்”, என்று யோனா நினைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தவறுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அவர் மறந்துவிட்டார். இந்த காற்று தொடர்ந்தால் கப்பல் உடைந்து விடும், எல்லாரும் மூழ்கிவிடுவார்கள் என்று கப்பலில் இருந்தவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். யோனாவை நோக்கி, “இந்தக் கடல் அமைதியடைய நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள்.
பாவத்தின் விளைவை ஏற்றுக்கொள்வதைத் தவிர யோனாவுக்கு மீண்டும் வேறு வழியில்லை தீர்க்கதரிசியாக இருந்ததால், என்ன சொல்ல வேண்டும் என்று அவருக்குத் தெரிந்து இருந்தது. “என்னை கடலில் வீசிவிடுங்கள் கடல் அமைதியாகிவிடும்” என்றார். அதை கேட்டதும் கப்பலில் உள்ள மனிதர்கள் சோர்வடைந்தார்கள். யோனாவை கொலை செய்வது போல் அவர்களுக்கு தோன்றியது. எனவே, அவர்கள் கப்பலை மீண்டும் தரைக்கு இழுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணாயிற்று. கடல் இன்னும் அதிகமாக கொந்தளிக்க தொடங்கியது.
அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கவலையுடனும் பயத்துடனும் யோனாவை கடலில் வீசினார்கள். அதற்கு பின் நடந்ததை நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். கடல் மிகவும் அமைதியானது. கப்பலில் இருந்த அனைவரும் ஆசிரியப்பட்டார்கள். யோனாவின் தெய்வம் எவ்வளவு பெரியவர் என்று அறிந்துகொண்டார்கள்.
தேவன் கொடூரமானவர் அல்ல. அவர் யோனா மாண்டுபோவதை விரும்பவில்லை. அவர் அற்புதமான ஒன்றைச் செய்தார். அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய அடுத்த பகுதிக்கு நீங்கள் திரும்பி வர வேண்டும். மிஸ் பன்னீராதீங்க!
செயல்பாடு
ஒவ்வொரு வயதினருக்கும் செயல்பாடு வேறுபடும் – Special (3-7 வயது), Strong(8-12 வயது), Deep(13-15 வயது)
Special (3-7 வயது)

பக்கம் 1: கீழ்ப்படியாததால் யோனா ஏங்கே விழுந்தான் என்று பிள்ளைகளிடம் கேளுங்கள். (பதில்: கடலின் ஆழத்தில்). பிள்ளைகளிடம் Man Paper Cutout கொடுத்து, அதில் யோனாவின் முகத்தை வரைய சொல்லுங்கள். (உ.தா. கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்)
பின்னர் Worksheet-ல் உள்ள கடல் பகுதியில் அதை ஒட்டும்படி சொல்லுங்கள்.
பக்கம் 2: படங்களைப் பார்த்து கதையைச் சொல்ல சொல்லுங்கள்.
Strong (8-12 years)
பக்கம் 1: சிறுவர்களை பக்கம் ஒன்றில் உள்ள மூன்று படங்களைப் பார்த்து அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கச் சொல்லுங்கள். ஒவ்வொரு படமும் சிறுவர்கள் அன்றாட செய்யும் தவறை பிரதிபலிக்கிறது. பிறகு ஒவ்வொரு தவறின் விளைவுகளைப் பற்றி பேசச் சொல்லுங்கள்.
பக்கம் 2: ரோமர் 6:23-ஐ விளக்க இரண்டாவது தாளைப் பயன்படுத்தவும் – பாவத்தின் சம்பளம் மரணம். படம் மிகவும் இருண்ட இடத்தைப் படம் எடுப்பது போல் ஒரு கேமராவைக் காட்டுகிறது. பாவத்தின் நித்திய விளைவைப் பற்றி விவாதிக்கவும். இவாறு கேள்விகள் கேட்டு அவர்களை சிந்திக்க தூண்டுங்கள் – தேவனிடமிருந்து பிரிவது எப்படி இருக்கும் (பதில்: மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு எதிரான இடமாய் இருக்கும்). நரகம் பற்றி ஒரு பயத்தை உருவாக்குவது நமது நோக்கமல்ல; மாறாக தேவன் இல்லாத நிலையை அவர்களுக்கு உணர்துவதே நமது நோக்கம். ஏனென்றால் தேவனை விட்டு விலகி இருப்பர்வர்கள், கவலை, பாரம், தனிமை என்று ஒரு நரகத்தில் தான் பூமியில்லே வாழ்கிறார்கள்.
விளையாட்டு
தேவையானவை: ஒரு பந்து. பந்தில் “பாவம்” என்று எழுதுங்கள்
விளையாட்டு:
- இது பிரபலமான டாட்ஜ்பால் விளையாட்டு போன்றது.
- சிறுவர்களை இரண்டு சம குழுக்களாக பிரிக்கவும்.
- முதல் குழுவை ஒரு பெரிய வட்டத்தை உருவாக்க சொல்லுங்கள்.
- இரண்டாவது குழுவை வட்டத்திற்குள் செல்லச் சொல்லுங்கள்.
- வட்டமாக நிற்கும் சிறுவர்களிடம் பந்தை கொடுங்கள்.
- வட்டத்திற்குள் இருக்கும் இரண்டாவது குழு உறுப்பினர்களின் முழங்காலுக்கு அடியில் அடிக்க அவர்கள் பந்தை வீச வேண்டும்.
- பந்து ஒரு சிறுவரின் கால்களைத் தொட்டால், அவன்/அவள் “அவுட் (Out)”.
- கால்களுக்கு மேல் எங்கேயாவது பந்து பட்டால், அவர்கள் “நாட் அவுட் (Not out)”.
- பெரும்பாலான இரண்டாவது குழுவினர் ஆட்டத்தில் இருந்து வெளியேறும் வரை விளையாடுங்கள்.
- இரண்டாவது குழுவை ஒரு வட்டமாகவும், முதல் குழுவை வட்டத்திற்குள் செல்லவும் செய்வதன் மூலம் விளையாட்டை மீண்டும் தொடரவும்.
செய்தி: (சிறுவர்களிடம் பந்தில் “பாவம்” என்று எழுதப்பட்டிருப்பதைக் காட்டுங்கள் ) பந்து உங்களைத் தாக்கியபோது, நீங்கள் விளையாட்டிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். வெளியேறும்போது எப்படி இருந்தது? (சிறுவர்கள் பதில் சொல்லட்டும்) நீங்கள் “அவுட்” ஆகும்போது எப்படி சந்தோஷத்தை உணரவில்லையா, அப்படியே தான் பாவம் செய்த பிறகு இருக்கும். வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுப்பது, நித்திய விளைவுகளையும் கொண்டுள்ளது என்பதை இன்று நாம் அறிந்தோம். அவை என்ன என்பதை யாராவது பகிர்ந்து கொள்ள முடியுமா? (சிறுவர் பதிலளிக்கட்டும்)

Leave a comment